×

தொடர் மழையின்றி எள் விவசாயம் பாதிப்பு

*கவலையில் விவசாயிகள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் எள் அறுவடை செய்து, மாறுகளை உலரை வைத்து எள்ளை பிரித்தெடுக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது, மழையின்றி விளைச்சல் குறைந்ததால் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல்லிற்கு அடுத்தப்படியாக மிளகாய், சிறுதானிய வகை பயிர்கள், மல்லி, பருத்தி, நிலக்கடலை அதிகமாக பயிரிடுவது வழக்கம். மானாவாரியில் குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் தரக்கூடிய எள்ளை மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே தெற்குதரவை, புதுக்கோயில், வைரவன்கோயில், திருஉத்தரகோசமங்கை. ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை, செங்கடி, வரவணி, சேத்திடல், சீனாகுடி, வண்டல். முதுகுளத்தூர் அருகே செல்லூர், மேலக்காவனூர், திருவரங்கம், கடம்போடை, நெடியமாணிக்கம், தேரிருவேலி, தாழியாரேந்தல், மட்டியாரேந்தல் உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம கிராமங்கள் பயிரிட்டனர்.

கடலாடி அருகே மலட்டாறு, டி.எம்.கோட்டை, கடுகுசந்தை, உச்சிநத்தம், கொண்டுநல்லான்பட்டி, கொக்கரசன்கோட்டை, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, சேதுராஜபுரம், ஆப்பனூர், கிடாத்திருக்கை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள், கமுதி வட்டத்தில் அபிராமம், மருதகநல்லூர், பெருநாழி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பரமக்குடி, நயினார்கோயில், திருவாடானை உள்ளிட்ட பகுதிகள் என மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் எள் விவசாயம் பயிரிடப்பட்டுள்ளது.

கார்த்திகை பட்டத்தில் விதைக்கப்பட்ட எள் பயிர் நன்றாக வளர்ந்தது. விவசாயிகள் களை எடுத்தல்,உரம் இடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை செய்து வந்தனர். மாசி மாதமான தற்போது காய் காய்த்து மகசூல் நிலையை எட்டியதால் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட எள் மாறுகளை சாலை மற்றும் காலி இடங்களில் காயவைத்து பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

முதுகுளத்தூர் பகுதி விவசாயிகள் கூறும்போது, இந்தாண்டு போதிய மழையின்றி சில இடங்களில் தோட்டப்பயிர்களான மிளகாய், மல்லி, சின்ன வெங்காயம் விவசாயம் பாதிக்கப்பட்டது.
இதனால் சுமார் 3 மாத குறுகிய காலத்தில், குறைந்தளவு தண்ணீரில் வளரக்கூடிய எள் பயிர்களை கார்த்திகை, மார்கழியில் பயிரிட்டோம். ஆனால் தொடர் மழையின்றி எள் விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதனால் குறைந்தளவிலான மகசூல் கிடைந்தது. அதனை தற்போது கூலி ஆட்கள் மூலம் அறுவடை செய்து, அந்த எள் மாறுகளை கட்டுகளாக கட்டி வெயிலில் உலர வைத்து, பிரித்தெடுத்து வருகிறோம்.

வீட்டில் ஒரு படி எள்ளை ரூ.150க்கு கிராமமக்கள் வாங்கி செல்கின்றனர். வெளி மார்க்கெட்டில் கிலோ ஒன்றிற்கு ரூ. 200 முதல் 250 வரை மட்டும் விலை கிடைக்கிறது. இது கட்டுபடியாகும் விலையாக இல்லை. இதனால் செலவிட்ட பணம் கூட கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் மிளகாய், உளுந்து வாங்குவது போன்று எள்ளிற்கும் உரிய விலை நிர்ணயம் செய்து அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். வரும் காலங்களில் எள் பயிரிட தேவையான உதவிகளை வேளாண் துறை வழங்கவேண்டும் என்றனர்.

The post தொடர் மழையின்றி எள் விவசாயம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,
× RELATED கலெக்டர் ஆவது லட்சியம்; ராமநாதபுரம்...